கடந்த மாதம் 28ஆம் திகதி களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனடிப்படையில், இந்த கொலைக்கு நிதியுதவி வழங்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகெதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடையவர் எனவும் ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த நபர் மத்துகம, களுத்துறை, திஸ்ஸமஹாராம, வலஸ்முல்ல மற்றும் மொரவக்க ஆகிய நீதவான் நீதிமன்றங்களால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் களுத்துறை தெற்கு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.