காலாவதியான இரசாயனம், ஊசி பயன்பாடு மற்றும் அதிக கட்டணம் கேகாலை தனியார் வைத்தியசாலைக்கு 5,20,000 ரூபா அபராதம்!
கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலாவதியான இரசாயனம் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தியமை மற்றும் அதிக கட்டணம் வசூலித்த குற்றத்துக்காக குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக கேகாலை நீதிவான் நீதிமன்றம் 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்டமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை கடுமையாக மீறியமைக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் கேகாலை மாவட்ட விசாரணை அதிகாரிகளால் கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த ஜூலை 24ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் அவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன. இதன்போது எப்.பி.சி எனும் இரத்தப் பரிசோதனைக்காக நுகர்வோர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட 400 ரூபா கட்டுப்பாட்டு விலையை மீறி, நோயாளி ஒருவரிடமிருந்து 500 ரூபா அறவிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், வைத்தியசாலைஆய்வகத்தினுள் காலாவதியான எச்.சி.வி. பரிசோதனை அட்டைகள் தொகுதிகளும், கிளினிக்கல் சிஸ்டம் பகுப்பாய்வுகள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்காக காலாவதியான இரசாயன திரவங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் மவைத்ரதியசாலையின் மருந்தகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களுடன் காலாவதியான ஊசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இவ்வழக்கு கடந்த 6ஆம் திகதி கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான வைத்தியசாலை நிர்வாகம் தம்மீதான 3 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே நீதிவானால் 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள் அல்லது மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தும் , கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக கட்டணம் அறவிடும் தனியார் iவத்தியசாலைகள் அல்லது ஆய்வகங்கள் தொடர்பில் தகவல்கள் இருப்பின், 1977 எனும் குறுகிய இலக்கத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.