தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி, கராப்பிட்டிய மகப்பேறு போதனா வைத்தியசாலையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பிரதி சுகாதார அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் ஹன்சக விஜேமுனி அண்மையில் நேரில் சென்று கண்காணித்தார்.

6 மாடிகளையும் 6 சத்திரசிகிச்சை கூடங்களையும் கொண்ட இந்த வைத்தியசாலையில் 600 கட்டில்கள், அவசர சிகிச்சைப்பிரிவுகள், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் மற்றும் விசேட சிறுவர் பிரிவுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் காணப்படுகின்றன. இங்கு முன்னெடுக்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் கிளினிக் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பிரதி அமைச்சர், வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.எம். சோமரத்ன இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய புள்ளிவிபரங்கள், தாய்மார் மற்றும் சிசு மரண வீதங்கள், நோயாளர் திருப்தி குறித்த ஆய்வுகள் மற்றும் பௌதிக வள முகாமைத்துவம் குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தார். அத்துடன், 2027ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி , வைத்தியசாலையிலுள்ள மனித வளங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்து, நோயாளர் பராமரிப்புச் சேவைகளை முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பம்: நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்துடனான புதிய இயந்திரங்களை வைத்தியசாலைகளுக்குத் தேவையான அடிப்படையில் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல வைத்தியசாலைகளில் உபகரணங்களை நிறுவும் பணிகள் முறையான திட்டமிடலின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் கட்டிடங்களை நிர்மாணிக்கும் போதே, அவற்றுக்குத் தேவையான இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவற்றுக்கான மனித வளங்கள் குறித்தும் முறையான திட்டமிடல் அவசியம் என்றார்.