காலி, தங்கேதர பகுதியில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி - தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
காலி, தங்கேதர பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேக நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள், வீதியிலிருந்த நபர் மீது இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
44 வயதுடைய காலி, தங்கேதர பகுதியைச் சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வட்டிக்குப் பணம் வழங்குபவர் எனவும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், உயிரிழந்த நபர் ஏற்கனவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய தினம் சம்பவ இடத்துக்கு காலி நீதிவான் விஜயம் செய்து நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி -தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து குறித்த கார் தொடர்பில் சோதனைகளை முன்னெடுத்தனர்.
மேலும் தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் காலி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.