கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருதற்கு நான் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறேன் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு திங்கட்கிழமை (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
திருகோணமலை மாவட்டத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசம் மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள பல கிராமங்களின் மக்களும் தங்களது அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையையே நம்பியுள்ளனர். எனவே, இந்த வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் தரத்தையும் சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலமாக மக்களால் முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கையாகும்.
இந்த மக்களின் கோரிக்கையை நான் ஒரு அரசியல் கோஷமாக அல்லாது, மக்களின் அடிப்படை உரிமையாகக் கருதி பல வருடங்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றேன்.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உரைகளிலும், பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணைகளின் போதும், திருகோணமலை மாவட்ட மக்களின் சார்பில் பலமுறை இந்தக் கோரிக்கையை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
அதேபோன்று, ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை பலமுறை நேரில் சந்தித்து இந்த விடயத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளேன்.
இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் நிர்வாகச் சவால்கள் காரணமாக இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இருந்தபோதிலும், மக்களின் நலனுக்கான இந்தக் கோரிக்கை கைவிடப்படாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு வந்துள்ளேன்.
அதன் ஒரு முக்கிய அங்கமாக, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
அதன் பின்னர் இந்த விடயம் நிர்வாக ரீதியாக பின்வரும் முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றது:
24.12.2025 – கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், எனது கோரிக்கையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
05.01.2026 – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.
06.04.2026 – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு குறித்த விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
07.05.2026 – திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிண்ணியா தள வைத்தியசாலையை மாகாண சுகாதார அமைச்சிலிருந்து மத்திய சுகாதார அமைச்சின் கீழ் மாற்றுவதற்கான Type-A Recategorization Assessment அறிக்கையைத் தயாரித்து மேலதிக நடவடிக்கைக்காக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பித்தார்.
இந்த ஆவணங்களும் நிர்வாக நடவடிக்கைகளும், இந்தக் கோரிக்கை வெறும் கருத்தாக இல்லாமல், அரசின் நிர்வாக நடைமுறைக்குள் உள்வாங்கப்பட்டு முன்னேற்றம் கண்டிருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
மேலும், 2026 ஜூலை 16 அன்று நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் விடயம் மீண்டும் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை புதிய விடயமாக முன்வைக்கப்பட்டபோது, கடந்த பல வருடங்களாக நான் மேற்கொண்ட பாராளுமன்ற மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் நான் சுட்டிக்காட்டினேன்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமானவர், இந்த விடயத்தில் கடந்த காலங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இருந்துள்ளன என்பதை கூட்டத்தின் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியலில் ஒருவரின் பணியை மற்றொருவர் அங்கீகரிப்பது என்பது ஜனநாயக அரசியல் பண்பாட்டின் நல்ல முன்னுதாரணமாகும். இந்த அணுகுமுறையை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். மக்களின் நலனை முன்னிறுத்தும் விடயங்களில் அரசியல் வேறுபாடுகளை விட உண்மையும் தொடர்ச்சியான பணியுமே மதிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
அதேபோன்று, 2026 ஜூலை 16 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அவர்கள், கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் சுகாதார அமைச்சுடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நான் நேர்மறையான முன்னேற்றமாகக் கருதுகின்றேன்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் கிண்ணியா தள வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தும் எந்தவொரு உண்மையான முயற்சியும் வெற்றியடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
மக்கள் நலனே எமது முன்னுரிமை. மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அது எந்த அரசாங்கத்தின் ஊடாக வந்தாலும், மக்களின் நலனுக்காக எமது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்குவோம்.
கிண்ணியா மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை, பாராளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட அமைச்சுகளிலும், அனைத்து நிர்வாக மட்டங்களிலும் எனது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.