வெள்ளிக்கிழமை (06.03.2026) யாழ் குருநகர்க் கடலில் படகு விபத்துக்குள்ளானமை தொடர்பாக முழுமையான காரணங்களைக் கண்டறிவதற்கான அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். துயரத்திலிருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

விபத்துக்குள்ளான படகு பயணத்துக்குப் பாதுகாப்பான நிலையில் இருந்ததா?, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா?, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.