குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என சென்னையில் நடந்த 'சடவு' நூல் வெளியீட்டு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினார்.

'எழுத்து' தமிழிலக்கிய அமைப்பு, இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 'திருமதி சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு' எனும் பெயரில் நாவல் போட்டி நடத்தி வருகிறது. 3 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு, சிறந்த நாவல்களை தேர்ந்தெடுத்து பரிசளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான 'திருமதி சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசை' எழுத்தாளர் செ.ஏக்நாத்ராஜ் எழுதிய 'சடவு' நாவல் பெற்றுள்ளது.

இதற்கான பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, எழுத்து அமைப்பு மற்றும் 'கவிதா பதிப்பகம்' சார்பில் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. நூலாசிரியர் செ.ஏக்நாத் ராஜுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் விருது பட்டயத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து 'சடவு' நாவலின் முதல் பிரதியை தமிழ்நாடு பாடத்திட்ட வரைவுக் குழு தலைவரான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்ற, நடுவர் குழு சார்பாக எழுத்தாளர் என்.ஸ்ரீராம் நூல் அறிமுக உரையும், எழுத்தாளர் அ.வெண்ணிலா நூல் மதிப்புரையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானிமயில் சாமி அண்ணாதுரை பேசியதாவது: சோர்வில்லாத வாசிப்பு அனுபவத்தை 'சடவு' தருகிறது. ஒரு குடும்ப அமைப்புக்குள் தலைமுறை தலைமுறையாக பெண்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் உரிமை போராட்டங்களை இந்த நாவல் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தந்தை சம்பாதித்த சொத்தில் பெண் குழந்தைகளுக்கும் சம பங்கு உண்டு என்பதை நிலைநாட்டுவதற்காக போராடி வெற்றி பெறும் ஒரு பெண்ணின் கதை, வாசகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

திரைப்படங்களை பார்ப்பதை விட புத்தகங்களை வாசிப்பது மனிதர்களின் கற்பனை திறனை பன்மடங்கு விரிவடையச் செய்யும். ஒரு நாவலை வாசிக்கும் போது அதற்கான காட்சிகளையும் பின்னணி இசையையும் வாசகர்களே தங்கள் கற்பனையில் உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் வாசிப்பில் மட்டுமே உள்ளது. எனவே, புதிய சமுதாயத்தை உருவாக்கும் ஊக்கமளிக்கும் படைப்புகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை அவர்களிடம் விதைக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, “இந்த பரிசுக்கான நாவலை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பணியாற்றுவது என்பது எளிதான வேலை அல்ல. கருத்தொற்றுமை இல்லாமல் இந்த உலகத்தில் எந்தவொரு சிறப்பான முடிவையும் எடுக்க முடியாது. தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் விழாக்கள் எடுத்து அவர்களது படைப்புகளை கொண்டாட வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் எழுத்து அமைப்பின் அறங்காவலர் கார்த்திக் சிதம்பரம், கவிஞர் இலக்கியா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.