நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்து மற்றைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளினால் கடுமையான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

சேனக பெரேரா செவ்வாய்க்கிழமை (07) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீரகொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். அவ்வாறு மாற்றப்பட்ட கைதிகள், அந்தந்த சிறைச்சாலைகளின் அதிகாரிகளினால் கடுமையான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக எமது அமைப்புக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல்களும் சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

கைதிகள் மீதான இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தலையிட்டு, கைதிகள் மீதான இத்தகைய வன்முறைகளையும் சித்திரவதைகளையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.