கொக்கிளாய் ஏரிக்குளத்தை கடந்து, புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவை இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாலத் திட்டம் தொடர்பான கள ஆய்வு கடந்த புதன்கிழமை (22) சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
கரையோர பாதுகாப்புத் திணைக்களம் (Coastal Conservation Department) மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் நடைபெற்ற இக் களவிஜயத்தில் , பல்வேறு அரச துறைகளின் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டு, திட்டத்தின் தற்போதைய நிலை, சுற்றுச்சூழல் அம்சங்கள், தொழில்நுட்ப தேவைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
இந்தப் பாலம் புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவை(வடக்கையும் கிழக்கையும்)இணைக்கும் முக்கிய உட் கட்டமைப்புத் திட்டமாக மட்டுமல்லாது, மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுக்கே முன்மொழியப்பட்ட பாலம் அமைப்பது தொடர்பான கூட்டு கள ஆய்வாக அமைகிறது. கிழக்கு மாகாணத்தில் கொக்கிளாய் களப்பின் குறுக்கே முன்மொழியப்பட்ட பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கடந்த புதன்கிழமை கூட்டு கள ஆய்வு நடைபெற்றது.
இக் கள ஆய்வில் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள், குச்சவெளி மற்றும் முல்லைத்தீவு பிரதேச செயலகங்கள், குச்சவெளி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகள், நில ஆணையாளர் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம், தொல்பொருள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக் கள ஆய்வின் மூலம், முன்மொழியப்பட்ட பாலம் அமைக்கும் திட்டத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல், நிலம், நீர்வளம் மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்கள் குறித்து நேரடியாக ஆராயப்பட்டதுடன், திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களும் திரட்டப்பட்டன.