கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்புகள் பொதுவாக 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலத்துக்குள் சுமார் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானமையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குக் குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதற்கான காரணங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களைத் தடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் நேற்று மாநகர சபை உறுப்பினரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு நகரில் நேற்று முன்தினம் இரவு 6 மணிக்குப் பின்னர் சுமார் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பொதுவாக, கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்புகள் கடந்த பல வருடங்களாகச் சுமார் 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குறுகிய காலத்துக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானமை வழமைக்கு மாறான அசாதாரணமான நிலைமையாகும்.
இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுடன், பல இடங்கள் நீரில் மூழ்கின. இதனால் நகர மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். மக்களுக்காக தொடர்ச்சியாகப் பணியாற்றும் நிறுவனமென்ற வகையில், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் எம்மால் இயன்ற அதிகபட்ச முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த அவசர நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு மாநகர சபை, பொலிஸார், முப்படையினர் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கால்வாய்களைச் சுத்திகரித்தல், வெள்ளநீரை அகற்றுதல் உள்ளிட்ட அவசரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக, தற்போதைய நிலைமையில் மக்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுக்கு அவசியமான உதவிகளையும் நிவாரணங்களையும் முடிந்தவரை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
பொதுவாக நகரின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியையே தாங்கிக்கொள்ள முடியும். எனினும், சில பகுதிகளில் வடிகால் கட்டமைப்புகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சிலவற்றால் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இவ்வாறான மேம்படுத்தப்பட்ட வடிகால் கட்டமைப்புகள் நகரின் மிகக் குறைந்தளவிலான பகுதிகளிலேயே காணப்படுகின்றன.
குறுகிய காலத்துக்குள் சுமார் 125 முதல் 129 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாவது என்பது மிகவும் அதிகமான மழைவீழ்ச்சியாகும். எனவே, தற்போதைய வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு வடிகால் கட்டமைப்புகளின் கொள்ளளவு மாத்திரம் காரணமல்ல. மிகக் குறுகிய காலத்துக்குள் அசாதாரணமான அளவில் மழைவீழ்ச்சி பதிவானமையும் இதற்கான முக்கிய காரணமாகும்.
இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் குறைப்பதற்கும் நீண்டகால அடிப்படையில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய விசேட சூழ்நிலையின் தன்மையையும் அதன் தாக்கத்தையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டியது அவசியமாகும்.
எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகக் குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் குறுகியகாலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதேவேளை, மத்தியகால மற்றும் நீண்டகாலத் திட்டங்களையும் உரிய கால அவகாசத்தை ஒதுக்கி நிச்சயமாக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.