கொழும்பு - மருதானை, பட்டியாவத்த பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (17) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் 02 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 10ஐச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வேறொருவருக்கு வெடிமருந்துகளை வழங்கியதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, மற்றொரு சந்தேகநபர் 9மில்லிமீற்றர் தோட்டாக்கள் 75 மற்றும் 42 ரி56 வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு -10 ஐச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.