கொழும்பு, காலிமுகத்திடல் கடற்பரப்பில் இன்று புதன்கிழமை  (10) குளிக்கச் சென்ற பாடசாலை  மாணவர்கள் மூவர் திடீரென ஏற்பட்ட அலையினால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு மாணவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இருந்து காலிமுகத்திடல் கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற சுமார் 15 வயதுடைய பாடசாலை  மாணவர்களுக்கே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மொத்தம் 6 பேரடங்கிய மாணவர் குழுவொன்றே இவ்வாறு கடலில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளதுடன், அவர்களில் மூவர் அலைச்சீற்றம் காரணமாகக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மற்றைய மாணவரைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையின் விசேட  குழுவொன்று  கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.