சிற்றுண்டிகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை நேரடிச் சூரிய ஒளியில் படும்படி களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான எட்டுக் குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 41,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்த விசேட உணவுப் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்தே இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனையின் போது, உணவுச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை மீறும் வகையில், சிற்றுண்டி வகைகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் கடும் நேரடிச் சூரிய ஒளியில் படும்படி வைக்கப்பட்டிருந்தமையை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த வர்த்தகர், தன்மீது சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மொத்தமாக 41,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், விதிமீறல்களுக்கு உள்ளான குறித்த உணவுப் பொருட்களை அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.