கொழும்பு நகரில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமை இயற்கையான வெள்ள அனர்த்தம் என்பதைவிட, நகர நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் உருவான மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வெள்ள நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே குற்றம்சாட்டினார்.

கொழும்பு நகரில் வடிகான்கள், நீர்வழிப் பாதைகள் மற்றும் கால்வாய்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமையும், வெள்ளநீரைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படைப் பராமரிப்புப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமையும் இந்நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகர சபை தனது அடிப்படைக் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்றத் தவறியுள்ளமையே இவ்வாறான வெள்ள நிலைமைக்குக் காரணமாகும். நகரில் உள்ள வடிகால் கட்டமைப்புகள், கால்வாய்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளை உரிய காலத்தில் துப்புரவு செய்து பராமரித்திருந்தால் இத்தகைய நிலைமையை ஓரளவுக்காவது தவிர்த்திருக்க முடியும்.

வெறுமனே மேடைகளில் நின்று பெரிய பெரிய கருத்துக்களைக் கூறுவதாலும், வாக்குறுதிகளை வழங்குவதாலும் மாத்திரம் நகரமொன்றை நிர்வகித்துவிட முடியாது. அதற்கான செயற்பாட்டுத் திறனும், பொறுப்புணர்வும் அவசியமாகும். இன்று நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகச் செயற்பாடுகளைப் பார்க்கும்போது, அவற்றின் அடிப்படையான பராமரிப்புப் பணிகளைக்கூட முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக, ஒரு வடிகாலைக்கூடச் சுத்தப்படுத்த முடியாத, ஒரு கால்வாயைக்கூடத் துப்புரவு செய்ய முடியாத அளவுக்கு நகர நிர்வாகம் செயற்படுகின்றது. இது நாட்டின் நகர நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவையே வெளிப்படுத்துகின்றது.

2014ஆம் ஆண்டில் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட உலகளாவிய சுற்றுலா நகரங்கள் சுட்டெண்ணின் அடிப்படையில், உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்த சுற்றுலாத் தலமாகக் கொழும்பு நகரம் தெரிவு செய்யப்பட்டது. அப்பட்டியலில் சீனாவின் செங்டு நகரம் இரண்டாவது இடத்தையும், அபுதாபி நகரம் மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தன. கொழும்பு நகரம் முதலிடத்தைப் பெற்றிருந்தது.

அந்தக் காலப்பகுதியில் கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களே இந்த மாற்றத்துக்குப் பங்களித்தன. எனவே, நான் முன்னர் குறிப்பிட்ட கிளி மற்றும் கழுகு தொடர்பான உதாரணம் தற்போதைய நிலைமைக்கும் பொருத்தமானதாகும்.

இந்த அரசாங்கத்திடமும் கொழும்பு மாநகர சபை நிர்வாகத்திடமும் நான் ஒரு விடயத்தைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த காலத்தில் கொழும்பு நகரத்தில் அமைக்கப்பட்ட வீதிகள், நடைபாதைகள், பூங்காக்கள், நீரேந்துப் பகுதிகள், வடிகால் கட்டமைப்புகள் மற்றும் மழைநீர் வழிந்தோடும் கால்வாய் கட்டமைப்புகள் ஆகியவற்றை முறையாகப் பராமரித்துத் துப்புரவு செய்யுங்கள்.

அவற்றைப் பராமரிப்பதற்கென முறையான கால அட்டவணையொன்றைத் தயாரித்து, தொடர்ச்சியாகச் செயற்படுத்துங்கள். பெரிய பெரிய திட்டங்களை முன்னெடுக்க முயற்சிப்பதைவிட, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து முறையாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், இவ்வாறான அடிப்படைப் பணிகளைக்கூடச் சரிவர முன்னெடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அந்த நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வடிவமைப்பாளராக அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ விளங்கினார். அவர் அமைதியாகச் செயற்பட்டு, தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றியதன் மூலம் கொழும்பு நகரத்தின் அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.ஆனால், இன்று துரதிர்ஷ்டவசமாகக் கொழும்பு நகரம் மீண்டும் இவ்வாறானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நகரக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பதில்கூடத் தவறியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். எனவே, வெறுமனே வாக்குறுதிகளை வழங்குவதையும் வாய்ப்பேச்சுக்களில் ஈடுபடுவதையும் கைவிட்டு, நகர நிர்வாகத்தின் அடிப்படைக் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கமும் மாநகர சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.