முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நான் வெளியிட்ட கருத்து, எவ்விதத்திலும் கௌரவமிக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல. எனது கருத்தினால் எவருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என நுகேகொட நாளந்தராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி தினியாவல பாலித தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.

நுகேகொட நாலந்தராம விகாரையில் நேற்று (04) ஊடகவியலாளர் சந்திப்பபை ஏற்பாடு செய்து அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

நேற்று (03) ஜூன் மாதம் மூன்றாம் திகதி நுகேகொட நாளந்தராம விகாரையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில், வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் என்னிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டமை தொடர்பில் என்னிடம் வினவப்பட்டது. அந்த நேரத்தில், அந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றே நான் குறிப்பிட்டேன்.

நான் வெளியிட்ட அந்தக் கண்டனமானது, கௌரவ நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்லது திட்டமிட்டு வெளியிடப்பட்ட ஒன்றல்ல. அது முற்றிலும் மனிதநேயம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தாகும். மேலும், அது நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்பு என்பது அந்தச் சந்தர்ப்பத்தில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நீதிமன்றத்தை எப்போதும் மதித்து நடக்கும் ஒரு பிக்குவாக, இந்த விடயம் தொடர்பில் எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்வதுடன், இது குறித்து மன்னிப்பும் கோருகிறேன். எனது கருத்தின் ஊடாக எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பையோ அல்லது நீதிபதி ஒருவரின் செயற்பாட்டையோ விமர்சிக்கும் அல்லது சவாலுக்கு உட்படுத்தும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை.

இருப்பினும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக எனது கருத்து பிழையாக சித்தரிக்கப்பட்டு, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காட்டப்படுவதை என்னால் அவதானிக்க முடிந்தது. எனவே, அந்த விடயம் தொடர்பில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டியது எனது கடமையெனக் கருதுகிறேன். நேற்று (03) நான் வெளியிட்ட அந்தக் கருத்தை நான் மீளப் பெற்றுக்கொள்கிறேன். எனது வார்த்தைகளால் எவருக்கேனும் மனவருத்தமோ அல்லது அகௌரவமோ ஏற்பட்டிருக்குமென்று கருதினால், அது குறித்து மீண்டும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.