எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சிக் குழுக்களையும் ஒன்றிணைத்து தேவையான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனைத்து எதிர்க்கட்சிச் சக்திகளையும் ஒன்றிணைப்பதில் தெளிவான பொறுப்பு உள்ளது. அவர் பல்வேறு எதிர்க்கட்சிக் குழுக்களுடன் கலந்துரையாடி வருவதை நாம் பார்த்துள்ளோம். எனவே, அவர் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவார் என நாம் நம்புகின்றோம்.

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவரது தலைமைத்துவத்தை நாம் நிராகரிக்கவில்லை.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வெளியிட்டுள்ள சில கருத்துகள் காரணமாக எதிர்க்கட்சிக் குழுக்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படக் கூடாது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எஸ்.எம். மரிக்காரின் கருத்துகள் காரணமாக எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பிய சில குழுக்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தையோ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தையோ நாம் நிராகரிக்கவில்லை.

நாம் பரந்த எதிர்க்கட்சி கூட்டணியொன்று உருவாக வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். சிறிய சிறிய காரணங்களால் அந்த முயற்சி பாதிக்கப்படக் கூடாது.

எதிர்வரும் தேர்தல் நெருங்கும் இறுதி நேரத்தில் கூட எதிர்க்கட்சிக் குழுக்கள் ஒன்றிணைந்தாலும் அது நல்லதே. ஆனால் அதற்கு முன்னர் பல்வேறு குழுக்கள் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் பிளவுபடாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தற்போதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் இந்த எதிர்க்கட்சிக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க முன்வர வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம். அதேபோன்று, மறுபுறத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியான பங்கு உள்ளது.

அவர் தற்போது சிறையில் அல்லது தடுப்புக்காவலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அனைத்து அரசியல் குழுக்களும் தங்களது அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.

தற்போதைக்கு புதிய ஜனாதிபதி ஒருவரை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இன்னும் கால அவகாசம் உள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். கட்சி உறுப்புரிமையைப் பெறுவதை விட எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் செயற்பாட்டுக்கு எமது பங்களிப்பை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்டார்.