நாட்டில் நீதிக்கட்டமைப்பில் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் காணப்படுகின்றன. இதற்கு தீர்வாக மோதல் முகாமைத்துவ தீர்வு கொள்கை அமுலாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். சட்டத்தரணிகள் தமது சேவை பெறுநர்களிடமிருந்து மனசாட்சிக்கு அமைவாக நியாயமான முறையில் கட்டணம் அறவிட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இன்று (1) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் நீதிக் கட்டமைப்பில் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் காணப்படுகின்றன. இது நீதியின் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து காத்திருப்பில் வைக்கச் செய்கிறது. நாட்டில் மொத்தமாக 333 நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. கீழ் நிலை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் இவ்வாறு நிலுவையில் காணப்படுகின்றன.

ஒருசில வழக்குகள் விசாரணை செய்வதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் செல்கிறது. இதற்கு இனியேனும் தீர்வு காண வேண்டும். மோதல் முரண்பாடு தீர்வு கொள்கையை அமுல்படுத்த வேண்டிய காலம் தோற்றம் பெற்றுள்ளது.

லக்ஷ்மன் கதிர்காமத்திற்கு சிறுநீரகம் ஒன்று தேவைப்பட்டபோது அவருக்கு சிறுநீரகத்தை வழங்குவதற்கு பிக்கு ஒருவர் முன்னிலையாகியுள்ளார். அதற்காக 9 இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது.

தனது சகோதரர் மீதான மனித படுகொலை வழக்கில் சட்டத்தரணிகளுக்கு கட்டணம் செலுத்துவதற்காக இந்த பணம் கோரப்பட்டுள்ளது. முதலில் காணியை விற்றுள்ளனர். அதன் பின்னர் விற்பதற்கு ஏதும் இல்லாத காரணத்தால் அவர் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.

வழக்குக் கட்டணத்துக்காக ஒருசிலர் தமது சிறுநீரகத்தையும் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சட்டத்தரணிகளின் அறவிடும் கட்டணத்தை கண்காணிக்கும் அதிகாரம் இராச்சியத்துக்கோ அல்லது உயர்நீதிமன்றத்துக்கோ கிடையாது. சட்டத்தரணிகள் மனசாட்சிக்கமைய கட்டணத்தை தீர்மானிக்க வேண்டும்.

சட்டத்தரணிகள்  இல்லாதவர்களுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு இலவசமாக முன்னிலையாக வேண்டும். அதேபோல் மனசாட்சியுடன் தமது சேவைப் பெறுநரிடமிருந்து நியாயமான முறையில் கட்டணத்தை அறவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.