பயங்கரவாத் தடைச்சட்டம் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது தொடர்பில் நான் இதுவரையில் முறையாக ஆராயவில்லை குறித்த சட்டமூலத்தின் ஆவணத்தைப் பெற்றுப் பரிசீலித்த பின்னரே அது தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத் தடைச்சட்டம் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருகின்ற போதிலும்,; சட்டமூலம் தொடர்பில் உண்மையில் என்னால் இதுவரையில் முறையாக ஆராய முடியவில்லை. அது தொடர்பான ஆவணம் ஒன்றைக்கூட நான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே, முதலில் அந்த ஆவணத்தைப் பெற்றுப் படித்துப் பார்க்க வேண்டும். அதில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்த பின்னரே அது தொடர்பில் எனது கருத்தைத் தெரிவிக்க முடியும்.

இந்த நாட்களில் நான் பெரும்பாலும் புத்தகங்களைப் பார்ப்பதிலும் வாசிப்பதிலும் எனது நேரத்தைச் செலவிட்டு வருகின்றேன். விசேடமான சமய நிகழ்வுகள் அல்லது முக்கியமான நிகழ்வுகளுக்கு அழைப்பு கிடைத்தால் அவற்றில் கலந்துகொள்கின்றேன். இறுதிச் சடங்குகள், திருமண நிகழ்வுகள் மற்றும் விகாரைகளில் நடைபெறும் சமய நிகழ்வுகளுக்கும் செல்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகின்றது. எமது அரசியல்வாதிகள் விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், நான் ஒவ்வொரு நாளும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். தற்போது பொலன்னறுவையில் எனக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்றும் இருக்கின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் என்னிடம் கேள்வி எழுப்புவதைவிட தற்போது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்களிடமே கேட்க வேண்டும். நாட்டில் பெருமளவான மக்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் கேட்டால் தற்போதைய நிலைமை தொடர்பான கருத்துகளை அறிந்துகொள்ள முடியும்.

எமது பௌத்த பிக்குகள் எப்போதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றார்கள். கொழும்புக்கும் செல்கின்றார்கள்; ஏனைய இடங்களுக்கும் செல்கின்றார்கள். அவை ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட செயற்பாடுகளாகும். ஒவ்வொரு துறையினருக்கும் அவரவருக்கெனத் தனித்துவமான செயற்பாடுகள் இருக்கின்றன. ஒரு நாடு என்றால் இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தான் செய்யும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டினார்.