மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்கள அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களை மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்கள கணினி அமைப்பில் உள்ளீடு செய்து மோசடி செய்த ஒருவரே இவ்வாறு இலஞ்ச ஆணைக்குழுவினால் நேற்று (07.07.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமகம, பிட்டிபனாவைச் சேர்ந்த ஒருவரே குறித்த சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

சுங்க வரிகள் மற்றும் சுங்க பரிசோதனைகளைத் தவிர்த்து, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கும், அந்த மாற்றத்தைப் பதிவு செய்வதற்கும், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்கள அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத மாற்றத்தின் மூலம் பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கும் உடந்தையாக இருந்ததாக சந்தேக நபருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.