மக்கொன குடாவ மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் சட்டவிரோத இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர், இரண்டு டிராக்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மீன்பிடி பரிசோதகர் அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பயாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (23) மாலை பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மக்கொன பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

டிராக்டர்களில் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் மூலம் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, கடந்த 05 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மீனவர்கள் குழுவொன்று சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

போராட்டம் நீடித்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி குறுகிய காலத்திற்குள் பொருத்தமான தீர்வை எட்ட இணக்கம் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.