ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சட்டவிரோதமான முறையில் வனவிலங்கு இறைச்சியை விநியோகித்து வந்த நபரொருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலத்கோஹ_பிட்டிய வனவிலங்கு அலுவலகத்தின் அதிகாரிகளால் அரநாயக்க புளுகம்மான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு பணியின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 12 போர் ரக துப்பாக்கிகள் 4 பொறித்துப்பாக்கிகள் 5 சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட விலங்குப் பொறிகள் உட்பட 1.5 கிலோகிராம் முள்ளம்பன்றி இறைச்சி வெடிமருந்துகள் ஈயக் குண்டுகள் வெடிப்பொருட்கள் பட்டாசுகள் தீப்பெட்டிகள் மற்றும் விலங்குப் பொறிகளை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் கம்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

உணவகங்களுக்கு விநியோகிக்கும் நோக்கத்திற்காக நீண்டகாலமாக சட்டவிரோத வனவிலங்கு வேட்டையில் குறித்த நபர் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் அரநாயக்க சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோத வேட்டை மற்றும் வனவிலங்கு இறைச்சி விற்பனைக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.