சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால்  சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (3) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. குறித்த காலப்பகுதிக்குள் திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி சமர்ப்பிக்கவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் திருத்தி, இம்மாதம் 28ஆம்  திகதிக்கு முன்னர் மீண்டும் சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தவறியமையினால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் முன்னர் நவம்பர் 3ஆம் திகதி நடாத்துவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், திருத்தப்பட்ட பிரேரணையை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கத் தவறியமையினால், திட்டமிட்டபடி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை நடத்த முடியாது. திட்டமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்குப் பதிலாக, நவம்பர் 3ஆம் திகதி ஒத்திவைப்பு விவாதம் நடாத்தப்படும்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக சபாநாயகருக்கு எதிரான திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி சமர்ப்பித்தால், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு - செலவுத் திட்டம்) மீதான விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் விவாதத்திற்கான நேரத்தை  ஒதுக்கித் தர முடியும் என்றார்.

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி 49 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தது. இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதால் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்பது பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு முரணானதாக அமையும் என கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் சட்ட மா அதிபரின் ஆலோசனை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகத்தால் ஐக்கிய மக்கள் சக்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சபாநாயகர் சபைக்கு தலைமைதாங்கும்போது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிப்பது எந்த வகையில் சிறந்ததாக அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பி, சிறந்த அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்க வேண்டுமாயின், தற்காலிகமாகவேனும் பதவி விலகி நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் இடமளிக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.