மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவுகின்ற போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் தளம்பல்கள் காரணமாக இலங்கை பாரியதொரு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது, எனவே நாம் எதையும் செய்ய முடியும் என்ற மமதையில் அரசாங்கம் இருக்கக்கூடாது என இரண்டாம் தலைமுறை கட்சியின் தலைவரும் ரோஹண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.இலங்கை செய்திகள்

இரண்டாம் தலைமுறை கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்

மத்திய கிழக்கு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு தற்போது உருவாகியுள்ள போர்ச் சூழலானது உலகளாவிய ரீதியில் நிச்சயமற்ற தன்மையைத் தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா முன்னெடுக்கும் தன்னிச்சையான செயற்பாடுகள் சர்வதேச சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் மீறுவதாகவே உள்ளன. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவர்களைப் படுகொலை செய்தும், ஏகாதிபத்திய அதிகாரத்தைப் பயன்படுத்தியும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தையுமே இன்று போர்க்களமாக மாற்றியுள்ளனர்.

அமெரிக்க டொலரை மையப்படுத்திய உலகப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் இராணுவ பலத்தைக் கொண்டு ஏனைய நாடுகளின் தலைவர்களைக் கடத்துவதும், படுகொலை செய்வதுமான செயற்பாடுகள் நீண்டகாலமாகவே தொடர்கின்றன. இவ்வாறானதொரு சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தரைவழி ஆக்கிரமிப்பாக மாறுமானால், அது உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும்.

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் உலகிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் உர உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கிடைக்கின்றன. உலக யூரியா தேவையில் மூன்றில் ஒரு பங்கு இப்பிராந்தியத்திலிருந்தே விநியோகிக்கப்படுகின்றது. இவ் நெருக்கடி தீவிரமடைந்தால், இலங்கையில் விவசாய நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே கொரோனா மற்றும் உரத் தடையினால் எமது நாடு திவாலாகும் நிலைக்குச் சென்றதை நாம் மறந்துவிடக் கூடாது.

உள்நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் மீண்டும் டீசல் மூலமான மின் உற்பத்திக்கே செல்ல வேண்டியுள்ளது. இதற்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் மத்திய கிழக்கு நெருக்கடி பெரும் தடையாக அமையும்.

தற்போதைய அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ இந்த சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்க்கமாகப் பார்ப்பதாகத் தெரியவில்லை. அதேபோன்று, செஸ் வரியை நீக்குவதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது. ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே தமது உணவு ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கான விவசாயப் புரட்சி ஒன்றையே அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாரிய ஆணையினை வழங்கியது முறைகேடுகளைத் தடுத்து, முறையான ஆட்சியை நிலைநாட்டவேயாகும். ஆனால், பழைய முறையிலேயே நிதி மற்றும் மத்திய வங்கி சட்டங்கள் தொடர்வதுடன், சில வர்த்தகப் பிரமுகர்களின் தேவைக்கேற்பவே தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக எமக்குத் தோன்றுகின்றது. ஜே.வி.பி யின் தூய்மையான அரசியல் தளம் இன்று சிலரின் நலன்களுக்காகச் சிதைக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்சி பேதமின்றி ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இரண்டாம் தலைமுறை கட்சி சார்பில் இதற்கான ஆக்கபூர்வமான யோசனைகளை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.