சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் எனக் கூறிய ஜே.வி.பி.யே இன்று அதனை முழுமையாக  நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையிலேயே தற்போது மின் கட்டண அதிகரிப்பிற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தித்வா புயலின் பின்னர் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளமை நியாயமானதா? அன்று இவர்கள் எதிர்க்கட்சியிலிருந்த போது, மின் கட்டணத்தை குறைக்குமாறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இன்று அவர்களே மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோருகின்றனர்.

இலங்கை மின்சாரசபை தற்போது நஷ்டமடையவில்லை என்றும், பாரிய இலாபமீட்டுவதாகவும் மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். புத்தாண்டின் ஆரம்பத்திலேயே மக்கள் மீது இத்தகையதொரு சுமையை சுமத்துவது நியாயமற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடகமே இதுவாகும்.

நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் எனக் கூறிய ஜே.வி.பி.யே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமக்குத் தெரியாத பல காரணிகளையும் செய்வதாகக் கூறி அதற்கு இந்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் தமது இருப்பிடங்களை இழந்துள்ள நிலையில், அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானம் குறித்து சிந்தித்திருக்கவே கூடாது.

இந்த தீர்மானத்துக்கு நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இவை தொடர்பில் சுட்டிக்காட்டும் ஊடகங்களுக்கு அரசாங்கத்தால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டு நலனுக்கு உகுந்ததல்ல என்றார்.