மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின் பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர். அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு 1750 கோடி ரூபா செலவு மின் பாவனையாளர்கள் மீது சுமத்தப்படவுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 9000 ரூபா கட்டணம் 6000 ஆகக் குறைக்கப்படும் என்றும், 6000 ரூபா கட்டணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்படும் என்றும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்திருந்தார்.
நாட்டிலுள்ள சுமார் 80 இலட்சம் மின் பாவனையாளர்கள் இந்த பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டனர். ஆனால் தற்போது 11 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சாரசபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளமைக்கான காரணங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மின்சாரசபையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக சுயமாக ஓய்வு பெறுவதற்கான முறைமைக்காக 5 ஆண்டுகளுக்கு கடன் தொகையைப் பெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன் தவணையை செலுத்துவதற்கு 875 மில்லியன் ரூபா (87.5 கோடி ரூபா) மூன்று மாதங்களில் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செலவை நாட்டிலுள்ள மின் பாவனையாளர்களிடமிருந்தே அறவிட திட்டமிடுகின்றனர்.
மின்சாரசபையின் நஷ்டத்தைக் குறைத்து அதனை மேம்படுத்துவதற்காக கடந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியது.
மின்சாரசபையின் உட்கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்காக மாத்திரம் சுமார் 5 பில்லியன் டொலர் செலவாகும். ஆனால் புதிய சட்டத்துக்கமைய இதற்கான எந்தவொரு புதிய வேலைத்திட்டமும் தயாரிக்கப்படவில்லை. இதற்கு மத்தியில் மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின்பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு 1750 கோடி ரூபா செலவு மின் பாவனையாளர்கள் மீது சுமத்தப்படவுள்ளது. உண்மையில் இந்த யோசனையை முன்வைத்திருப்பது மின்சாரசபை அல்ல. அமைச்சரவையே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது பெய்த மழை நீர் முறையாக சேமிக்கப்பட்டிருந்தால் இன்று மின் கட்டணத்தை ஒரு சதத்தால் கூட அதிகரித்திருக்க வேண்டியேற்பட்டிருக்காது.
இந்த முறையற்ற நிர்வாகத்துக்கு இந்த அரசாங்கமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். தற்போது முன்மொழியப்பட்டிருப்பதைப் போன்று மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தொழிற்துறை மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது என்றார்.
1,750 கோடி ரூபாவை மின் பாவனையாளர்கள் மீது சுமத்துவதற்காகவேமின்கட்டண அதிகரிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space