முறையற்ற விபரங்களைக் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவங்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.
இன்றையதினம் இந்தத் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, சஷி வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்துவதாக அறிவித்தார்.
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில், கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரியே சஷி வீரவங்ச தரப்பால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், மேல் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளதால் நீதவான் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பு தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.