தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அரசியலமைப்புக்கு விரோதமாக தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐந்து மாநிலத் தேர்தல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என செப்டம்பர் 25 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான SIR நடைமுறை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் SIR மூலம் 97,37,832 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றில் இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு வகையிலும் எத்தனை பேர் உள்ளனர் என்பதற்கான முழுமையான தொகுதிவாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், புதிய வாக்காளர் சேர்க்கை நடைமுறை, தரவுகளை மையப்படுத்துதல், SIR உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையர்களுக்குள்ளேயே ஆட்சேபங்கள் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பான ஆவணங்களையும் முழுமையான விளக்கங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

SIR நடைமுறையால் தமிழ்நாடு மட்டுமின்றி மேற்குவங்கம், அசாம், மராத்தியம் மற்றும் புதுச்சேரியிலும் வாக்காளர் பட்டியலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் காரணங்கள், நீக்கப்பட்டோர், மீண்டும் சேர்க்கப்பட்டோர், மேல்முறையீடுகள் மற்றும் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கம் குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். இதன் அடிப்படையில், மேற்கண்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். SIR தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான, சுதந்திரமான விசாரணை நடத்தி, சட்டரீதியான பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டு தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் 97,37,832 பெயர்களின் முழுமையான விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பதும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையாகும்.

மேலும், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள சுமார் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக மாற்று நிலம் வழங்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சிறைத்துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த இந்த நிலம் தொடர்பாக 1985-ஆம் ஆண்டிலேயே வருவாய்த்துறை ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. 2017, 2018 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக சாஸ்த்ரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், செப்டம்பர் 21 விசாரணையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திற்குப் பதிலாக மூன்று மடங்கு, 86.8 ஏக்கர் வரை மாற்று நிலம் வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்று நிலங்கள் சிறைத்துறையின் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்த பின்னர் மாற்று நிலம் கோரும் நடைமுறை எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட வேண்டுமென்றும், சாஸ்திரா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரியுள்ளது.

மேலும், தேனி மாவட்டம் வருசநாடு–மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களுடன் இணைந்து, அங்கு திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டது.

98 கிராம மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடும் CEG குழுவின் அறிக்கை மற்றும் அதன் அடிப்படையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். புலிகள் காப்பகம் அமைப்பதற்கு முன் மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கம் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், மக்களின் ஒத்துழைப்பின்றி புலிகளைப் பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேகமலை மக்களை வெளியேற்றுவதற்கு முன் அவர்களின் மறுவாழ்வு குறித்து அரசு தெளிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும், எது வனம், எது மக்களின் பூர்வீக நிலம், எது ஆக்கிரமிப்பு என்பது குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் திருமுருகன் காந்தி வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு சமூகத் தாக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மக்கள் வாழ்வாதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வருசநாடு–மேகமலை மக்களின் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதித்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய அவர், மக்களின் நிலத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க ஜனநாயக வழியில் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.