நாட்டில் தற்போது சிறுவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளமையால், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் சி. கித்துள்வத்த வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு பரவல் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் செவ்வாய்க்கிழமை (30) இலங்கை மருத்துவ சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறுவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் கணிசமான அளவில் தீவிரமடைந்துள்ளது. ஆகையால் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் ஓய்வு மிக அவசியம். பரீட்சை, போட்டி நிகழ்வு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் இதனால் நோய் தீவிரமடையலாம். பொதுவாக காய்ச்சல், தலைவலி, கடுமையான உடல் வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும்.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடி இரத்த பரிசோதனை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக காய்ச்சல் குறையும் போது நோய் குணமடைகின்றது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், டெங்கு காய்ச்சலில் இந்நிலையிலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆகையால் நோயாளிக்கு ஓய்வும், சிகிச்சையும், திரவ ஆகாரங்களை போதியளவில் வழங்குவதும் அவசியம்.
நோய் நிலைமையை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவோமாயின் டெங்கு காய்ச்சலை வீடுகளிலேயே குணப்படுத்திக்கொள்ள முடியும். இதனால் வைத்தியசாலைகளில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமையையும் தவிர்க்கலாம். அலட்சியப் போக்கால் இறுதியில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் 51 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நோயாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற தற்சமயம் பொறுப்புணர்வோடு செயற்படுவது அவசியம் என்றார்.
இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில், நாட்டில் நாளாந்தம் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொடர்ச்சியாக நாட்டில் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகுவதால் நுளம்பு பெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 54,189 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேல்மாகாணத்திலேயே தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதைக் காணக்கூடியதாக உள்ளதோடு 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நாளாந்தம் சுமார் ஆயிரம் நோயாளர்கள் பதிவாகுகின்றனர். டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்திலும் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள பகுதிகளை பிரதான இலக்காகக் கொண்டு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.