சிறைக்கைதிகளையும் ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை வீடியோ பதிவு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சந்தேகநபர்களையும் சிறைக்கைதிகளையும் தும்பறை சிறைச்சாலைக்கு ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் ஒன்றை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரிகள் 23 ஆம் திகதி பிற்பகல் கைது செய்து கண்டி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது நண்பருக்கு பிணை எடுப்பதற்காக கண்டி நீதிமன்றத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது நண்பருக்கு பிணை எடுக்க முடியாததால், அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் காட்சியை பதிவு செய்ய எழுந்த போது, நபர் ஒருவர் வீடியோ எடுக்க வேண்டாம் என எச்சரித்ததால், தான் சிறைச்சாலை பஸ்ஸை வீடியோ எடுக்கவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த சந்தேகத்திற்குரிய நபர் சிறைச்சாலை பஸ்ஸையும் கைதிகளையும் வீடியோ பதிவு செய்த போதே கைது செய்யப்பட்டு, அந்த சிறைச்சாலை பஸ்ஸிலேயே கண்டி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் பத்திரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.