சிறைச்சாலை மோதல்கள்: விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே காரணத்தைக் கூறமுடியும்!
Ad Space
Ad Space
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புலனாய்வுத்தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதுடன், அதுபற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்விரு அறிக்கைகளும் கிடைக்கப்பெற்றதன் பின்னரே இம்மோதல்கள் எதனால் ஏற்பட்டன என்பது பற்றிக் கூறமுடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடாக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (4) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகளைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் பதிவான வன்முறைகள் குறித்தும், நீண்டகாலமாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
ஏற்கனவே பதவியிலிருந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அவ்விசாரணைகளின் முடிவில் அவர் நிரபராதி என நிரூபிக்கப்படின், அவர் தொடர்ந்து இப்பதவியை வகிப்பார். மாறாக அவர் குற்றவாளி என அடையாளங்காணப்பட்டால், அதன் பின்னரே புதிதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிக்கமுடியும். அரச ஊழியர்கள் தொடர்பான விதிமுறைகளின் பிரகாரம் அதுவரை பதில் ஆணையாளர் நாயகமே பதவியில் இருப்பார்.
அடுத்ததாக தற்போது மாத்திரமன்றி நீண்டகாலமாகவே நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை இயலுமை அளவை விட மிக உயர்வாகவே இருந்துவருகிறது. சிறைச்சாலைகளுக்குள் நிலவும் அதிக நெரிசல் உள்ளே மோதல்களும் வன்முறைகளும் வெடிப்பதற்குக் காரணமாகின்றது.
இருப்பினும் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புலனாய்வுத்தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதுடன், அதுபற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்விரு அறிக்கைகளும் கிடைக்கப்பெற்றதன் பின்னரே இம்மோதல்கள் எதனால் ஏற்பட்டன என்பது பற்றிக் கூறமுடியும்.
அதேவேளை பல ஆண்டுகளாக சிறைச்சாலைகள் போதைப்பொருளை விற்பனை செய்யும் இடங்களாகவும், படுகொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை ஒழுங்கமைக்கும் இடங்களாகவும் இருந்திருக்கின்றன. அவற்றை முழுவதுமாக முடிவுக்குக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறோம் என்றார்.
Ad Space
Ad Space