திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்தபோது கைது செய்யப்பட்ட 28 வங்கதேச தொழிலாளர்களை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனங்களில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வருவதாக, பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சோதனை நடத்தியதில் கடந்தாண்டு ஜன.12-ம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது சலீம், ஆஷிக், முகமது ஆரீப் அலி உள்பட 28 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, 28 பேர் மீது வெளிநாட்டினர் சட்டப்பிரிவின்கீழ், போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சட்டரீதியான ஆவணங்கள் இன்றி, இந்திய நாட்டுக்குள் நுழைந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, 28 பேருக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, கடந்தாண்டு ஜூலை 17-ல் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஷைனி, மேல்முறையீட்டாளர்கள் அனைவரும் இதுவரை அனுபவித்த சிறைவாசம், இந்த குற்றங்களுக்கு போதுமானது. எனவே, தண்டனையை குறைக்க வேண்டும்" என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில், தகுந்த ஆதாரங்களுடன் காவல்துறை நிரூபித்துள்ளது. அதை பரிசீலித்தே, விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அதில்தலையிட எந்த காரணமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் வங்கதேசத்தில் வசித்து வருவதால், தாங்கள் அனைவரும் சொந்த நாட்டுக்கு திரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, விசாரணை நீதிமன்ற வழங்கிய தண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. மனுதாரர்கள் அனைவரும் ஓராண்டுக்கும்மேலாக காவலில் இருப்பதால், ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையே போதுமானதாக நீதிமன்றம் கருதுகிறது.
எனவே, அனைவரையும் விடுதலை செய்கிறேன். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, சட்ட நடைமுறைகளுக்குப் பின் அனைவரையும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நடைமுறையை, 3 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை சொந்த நாட்டுக்கு அனுப்பஉயர் நீதிமன்றம் உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space