கொழும்பு துறைமுக நகருக்கு  அருகே சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீனப் பிரஜைகளை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (24) அனுமதி வழங்கியுள்ளது.

கொலை செய்யப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் எஹெலியகொட, கரந்தனைப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (23) கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்த தினத்தன்று அதிகாலை வேளையில் மூன்று சீனப் பிரஜைகள் மீன்பிடிப்பதற்காகத் டாக்சி  ஒன்றில் கொழும்பு துறைமுக நகர்ப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது இரண்டு வாகனங்களில் அங்கு வந்த மற்றொரு சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் சென்று தப்பிச் சென்றுள்ளனர்.

கடத்தல்காரர்கள் தாங்கள் வந்த ஒரு வேனை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளதுடன், அந்த வாகனத்திலிருந்து 'எயர் பிஸ்டல்' ஒன்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, எஹெலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் கரந்தனை, கெட்டுக்கடை பகுதியில் சட்டவிரோத மதுபானச் சுற்றவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தபோது, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கற்கள் குவிக்கப்பட்டிருப்பதைக் கவனித்துள்ளனர்.

அதனைச் சோதனையிட்டபோது, மனிதக் கையின் ஒரு பகுதி வெளியே தெரிந்ததைக் கண்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அது கொழும்பு துறைமுக நகர்ப் பகுதியிலிருந்து கடத்தப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அத்துடன், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த காரொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவரின் சடலத்தைக் கடத்திச் செல்வதற்கு இக்காரே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனச் சந்தேகநபர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர்  தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடலோரப் பொலிஸ் பிரிவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சீனப் பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலுக்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.