சீனாவின் தொழில்முனைவோர் அறிவு, வணிக அனுபவம் மற்றும் நடைமுறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இலங்கையின் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களையும் இளம் தொழில்முனைவோரையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர வலியுறுத்தினார்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹவாக்சியாங்குக்கும் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் புதன்கிழமை (04) கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனா இலங்கையின் முக்கியமான நட்பு நாடாகும். இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள பங்களிப்புகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை அதனிடமிருந்து எதிர்பார்த்திருப்பது மிகவும் குறைவானதாகும். இரு நாடுகளினதும் பொருளாதாரங்களின் அளவில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டாலும், சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாகப் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது.

சீனாவின் தொழில்முனைவோர் அறிவு, வணிக அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இலங்கை அதிகளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களையும் இளம் தொழில்முனைவோரையும் போட்டித்தன்மை மிக்கவர்களாகவும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் உருவாக்க முடியும்.

இலங்கையில் சீன உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்வஜன அதிகாரம் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்றுக்கு சீனாவுக்கு விஜயம் செய்வதற்கும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் சீனத் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கான புலமைப்பரிசில் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பொருளாதார, கல்வி மற்றும் தொழில்முனைவோர் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்களைத் தொடர இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

image