சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், கிழக்கு சீனாவில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) ஜியாங்சு மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

கடையின் அருகே வசிக்கும் ஒருவர், பட்டாசுகளை முறையற்ற முறையில் கையாண்டு வெடிக்கச் செய்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில், அங்கிருந்த 08 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

சீனாவில் நாளை செவ்வாய்க்கிழமை (17) வசந்த விழா எனப்படும் புத்தாண்டு ஆரம்பமாகிறது. சீன ஜோதிடத்தின்படி இது 'குதிரை ஆண்டு' தொடக்கத்தைக் குறிக்கிறது. இக்கொண்டாட்டத்தின் போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாகும்.




இந்த விபத்தைத் தொடர்ந்து, சீன அவசரகால மேலாண்மை அமைச்சு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாடு குறித்துக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.




கடைகளுக்கு அருகே பட்டாசுகளைச் சோதித்துப் பார்ப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனையில் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாகச் சீனாவின் பல பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த ஆண்டு முதல் சில பகுதிகளில் இத்தடை தளர்த்தப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து மீண்டும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.