சுரேஷ் சலேவின் வாழ்க்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. நாட்டுக்கு உயிரையும் துணிச்சலையும் வழங்கிய ஒரு நபரை இவ்வாறான நிலைக்குத் தள்ளியது மிகுந்த கவலையளிக்கிறது. அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் உண்மையை உணர்ந்து, அவர் தனது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கான சுதந்திரமான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி தம்மரதன நாயக்க தேரர் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் விடுதலை மற்றும் அவர் தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழலில் இருந்து மீள்வதற்காக, சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையில், பெல்லன்வில ரஜமஹா விகாரையில் விசேட போதி பூசை மற்றும் பிரித் பாராயண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) மிக விமரிசையாக நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு அதிகாரியின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவிக்கும் வகையில், அரசியல் தலைவர்கள், மகா சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த வழிபாட்டு நிகழ்வை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் துணைவியார் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு, அவரது விடுதலைக்காகத் தங்களின் பிரார்த்தனைகளை முன்வைத்தனர். நிகழ்வில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது பிரார்த்தனைகளுடன் கூடிய ஆதரவை வெளிப்படுத்தினர்.
இங்கு பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி தம்மரதன தேரர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது ஒரு மனிதனுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் கவனிப்புகள் கூட சலேவுக்கு கிடைக்கவில்லை என்ற உணர்வு நாடு முழுவதும் பரவியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். நாட்டுக்குச் சேவையாற்றிய ஒரு நபர், இன்று குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாத நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, மிகுந்த துயரமான மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளான ஒரு சூழலில் வாழ நேரிட்டுள்ளது. அவர் இன்று உணவு மற்றும் நீர் அருந்துவதைத் தவிர்த்து, தனது உயிரைத் மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது துரதிர்ஷ்டவசமானது.
அவரது வாழ்க்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. நாட்டுக்கு உயிரையும் துணிச்சலையும் வழங்கிய ஒரு நபரை இவ்வாறான நிலைக்குத் தள்ளியது மிகுந்த கவலையளிக்கிறது. அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் உண்மையை உணர்ந்து, அவர் தனது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கான சுதந்திரமான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர் இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தைரியமாக முகம்கொடுக்க வேண்டிய சக்தியும் திறனும் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்கிறோம் என்றார்.