வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் அநுர , ஹரினி  மற்றும் ரில்வின்  தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் சனிக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போது சுரேஷ் சலே அவர்கள் தனது உயிருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு முறையான சத்தான உணவு வழங்கப்படுவதில்லை.

படுத்துக் கொண்டே உணவருந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உணவாக சாதமும், உண்ண முடியாத அளவு தரமற்ற முள்ளங்கி குழம்புமே வழங்கப்படுகிறது.

அடிப்படை மனித உரிமையான மலசல கூட வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. அவரைப் பார்ப்பதற்கு சென்றால் 20 முதல் 25 வரையிலான பாதுகாப்பு பொலிஸார் சூழவுள்ளனர்.

அவர் அடைக்கப்பட்டுள்ள ஆறடிக்கு நான்கடி குறுகிய அறையில் ஏழு சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டு, அவர் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை இன்னும் 24 அல்லது 48 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்தால், அவரது உயிருக்கு நிச்சயமாக ஆபத்து ஏற்படும்.

ஜனாதிபதி ஆணைக்குழுக்களிலாவது, சர்வதேச விசாரணைகளிலாவது சுரேஷ் சலேவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில், இந்த அரசாங்கம் அவரை அரசியல் பழிவாங்கலுக்காகவே கைது செய்து வைத்துள்ளது.

தற்போதுள்ள அரசாங்கத்திடம் மக்களுக்கு சொல்ல பதில் இல்லை. பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை, பணவீக்கம் 107 ஆக அதிகரித்துள்ளது, பொருளாதார வளர்ச்சி 10.3 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறான தோல்விகளை மூடிமறைக்கவே சுரேஷ் சலேவின் உயிரைப் பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த உண்ணாவிரதத்தின் போது சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்நாட்டின் மீது அன்பு கொண்ட தேசப்பற்றுள்ள சக்திகள் நிச்சயமாக வீதிக்கு இறங்குவார்கள். அவ்வாறு நடந்தால், அரசாங்கத் தலைவர்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தயவுசெய்து சுரேஷ் சலேவை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். அவருக்கு பொருத்தமான சிறை அறையை வழங்குங்கள், ஆரோக்கியமான உணவை வழங்குங்கள், மருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குங்கள், குடும்பத்தினருடன் பேச சந்தர்ப்பம் வழங்குங்கள், தகுந்த மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.

இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்களை ஏன் செய்கிறீர்கள்? இந்த நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரராக, வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து சொன்னவர், கே.பி மற்றும் நெடுமாறன் ஆகியோரைப் பிடிக்க துல்லியமான தகவல்களை வழங்கியவர், கொவிட் பெருந்தொற்றிலிருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர் அவர். அவரை இவ்வாறு நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம்.

சலேவுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் அநுர குமார திசாநாயக்க, ஹரினி அமரசூரிய மற்றும் ரில்வின் சில்வா தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

அநுர குமார திசாநாயக்கவால் 'இராணுவ வீரர்' என்று சொல்ல நாவெழவில்லை. சுரேஷ் சலேவின் உயிர் கடுமையான ஆபத்தில் உள்ளது. அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், நாட்டு மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டத் தயாராக இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதிக்குத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.