தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில் தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (04) செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
இதன்போது, குறித்த இடைக்கால மனுக்களை தாக்கல் செய்த 'தேசஹிதைஷி தேசிய இயக்கம்' மற்றும் 'தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்' ஆகிய அமைப்புக்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தமது வாதங்களை முன்வைத்தனர்.
வாதப் பிரதிவாதங்களைச் செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இந்த இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை இம்மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கிற்கு சுரேஷ் சலேயின் மனைவியும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.