சூரியவெவ - நுஜேகந்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விபத்தில் மூன்று பிக்குணிகள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உப வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திடீரென நுழைந்த ஒரு முச்சக்கர வண்டி, அவ்வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றில் மோதியுள்ளது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு சிறிய லொறியுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டி சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பிக்குணிகளும், அதன் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.