தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசாங்கத்துடனும் பொலிஸார் உள்ளிட்ட நிறுவனங்களுடனும் இணைந்து பொதுமக்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றினால் மாத்திரமே இந்த மரணத்தை ஏற்படுத்தும் கொடிய அச்சுறுத்தலிலிருந்து விடுபட முடியுமென அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக சனிக்கிழமை (04) வெளியிட்ட விசேட காணொளி மூலமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது டெங்கு நோய் நாடு பூராகவும் மிகவும் அதிவேகமாக பரவி வரும் தன்மையை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத் தரப்பிலிருந்து பொலிஸார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு, இந்த அபாயத்தை அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதை எம்மால் காண முடிகின்றது. எனினும், இந்த பொறுப்பை அவர்கள் மீது மாத்திரம் சுமத்திவிட்டு எம்மால் இந்த நிலைமைக்கு முகம்கொடுத்து இதிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது.
ஒவ்வொருவரும் தத்தமது இல்லங்கள், தத்தமது மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தாம் பணிபுரியும் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தாமாகவே முன்வந்து விழிப்புடன் செயற்பட்டு, சூழலை தூய்மையாக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த நோயிலிருந்து எம்மைக் பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த கொடிய அச்சுறுத்தலின் காரணமாக ஏற்கனவே பல பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த பயங்கரமான ஆபத்திலிருந்து விடுபட வேண்டுமாயின், நாம் அனைவரும் எமது பொறுப்பை நிறைவேற்றி, நாம் வாழும் சூழலை மிகவும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்த மரணத்தை ஏற்படுத்தும் அபாயத்தைத் தடுத்து நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன் என்றார்.