செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் புதன்கிழமை (11.11.2026) பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்தார். குறித்த பிரேரணை பிரதேச அபிவிருத்திக் குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்களுக்குச் சொந்தமான பல தனியார் காணிகள் 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இக்காணிகளை மீண்டும் விடுவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள காணிகளில் பல, வருடாந்தக் குத்தகை அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளாகும். இக்காணிகளை விடுவிப்பது தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடியபோது, வருடாந்தக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளை உரிய காலத்தில் புதுப்பிக்காத காரணத்தினால் அவற்றை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், வருடாந்தக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளாக இருந்தாலும், காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2013/01 இலக்கச் சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அவற்றை வனவளத் திணைக்களத்தினால் விடுவிக்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளைப் பிரதேச செயலாளரிடம் கையளிக்கும் பட்சத்தில், குறித்த காணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் காணி உரிமையாளர்களின் தகைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, உரியவர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளைப் பிரதேச செயலாளரினால் முன்னெடுக்க முடியும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், இச்செயற்பாட்டின்போது ஏற்படக்கூடிய மேலதிக சிக்கல்களைத் தீர்ப்பதற்காக காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2014/02 இலக்கச் சுற்றுநிருபத்தையும் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, குறித்த காலப்பகுதிகளில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பல குளங்களும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி 2013/01 இலக்க மற்றும் 2014/02 இலக்கச் சுற்றுநிருபங்களின் அடிப்படையில், இக்குளங்களையும் விடுவித்து அவற்றை மீண்டும் உரிய பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தனியார் காணிகள் மற்றும் குளங்களை விடுவிப்பது தொடர்பான இந்த இரண்டு விடயங்களையும் விசேட பிரேரணைகளாக முன்வைத்ததுடன், அவை பிரதேச அபிவிருத்திக் குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 2025 ஆம் ஆண்டில் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவித்தார்.

குறித்த ஆணைக்குழுவானது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாகவும், பாரியளவிலான பிரச்சினைகள் இல்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த ஆணைக்குழு மேல்மட்ட அரச அதிகாரிகளுடன் மாத்திரம் தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொண்டமையினாலேயே இவ்வாறான முடிவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காணிப் பிரச்சினைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள கீழ்மட்ட மக்களையும் காணி உரிமையாளர்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களது முறைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்திருந்தால், பெருமளவிலான காணிப் பிரச்சினைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கீழ்மட்ட மக்களுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், பிரதேச செயலகங்கள் ஊடாக மக்களின் காணிப் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.