செனகலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக செனகல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செனகலின் டாக்கார் நகருக்கு வடக்கே அமைந்துள்ள கெபெமர் மாவட்டத்தின் லூம்பூல் கடற்கரைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெயினுக்குச் சொந்தமான கேனரி தீவுகளை நோக்கிப் பயணித்த புலம்பெயர் பயணிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

படகில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணிகளும், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஸ்பெயினின் கேனரி தீவுகளைச் சென்றடையும் கடல் வழி உலகின் மிகவும் ஆபத்தான புலம்பெயர்வு பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் பாதை வழியாக ஐரோப்பாவைச் சென்றடைய முயற்சிக்கும் புலம்பெயர் பயணிகள், அதிக அலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பாதுகாப்பற்ற படகுகள் உள்ளிட்ட பல்வேறு அபாயங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

புலம்பெயர்வோர் உரிமைகளுக்காகச் செயற்படும் Walking Borders அமைப்பின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளை நோக்கிய கடல் பயணங்களின்போது குறைந்தது 635 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இத்தகைய ஆபத்தான கடல் பயணங்களைத் தடுப்பதற்கும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென செனகல் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.