இந்தியாவில் சென்னையிலும் தமிழ் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் வசிக்கும் இலங்கை பிரஜைகள். கடவுச்சீட்டுகள் மற்றும் அவசர பயண ஆவணங்களை வழங்குதல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான மேலதிக தகவல்கள், விளக்கங்கள் மற்றும் உதவிகளை, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடவுச்சீட்டுகள் மற்றும் அவசர பயண ஆவணங்களை வழங்குவது இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சட்டரீதியான அதிகார வரம்பிற்குள் வருகின்றது. இயந்திரத்தால் படிக்க முடியாத கடவுச்சீட்டு என்பது, செல்லுபடியாகும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு வசதியாக வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளால் முன்னர் வழங்கப்பட்ட ஒரு அவசர பயண ஆவணமாகும்.
சாதாரண கடவுச்சீட்டைப் போலல்லாமல், என்.எம்.ஆர்.பி ஆவணமானது வைத்திருப்பவர் இலங்கை திரும்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது. இது வழக்கமான சர்வதேச பயணங்களுக்கோ அல்லது விசா புதுப்பித்தல், தங்கியிருக்கும் காலத்தை நீடித்தல்,வேலைவாய்ப்பு,வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்பது அல்லது மூன்றாவது நாட்டிற்குப் பயணம் செய்வது போன்ற தேவைகளுக்கோ செல்லுபடியாகாது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இ.டி.டி அமைப்பு எனப்படும் இயந்திரத்தால் படிக்கக்கூடிய அவசரப் பயண ஆவணம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2026 மே 01 ஆம் திகதி முதல் என்.எம்.ஆர்.பி ஆவணங்களை வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த மாற்றம் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச பயண ஆவணங்களின் தரநிலைகளுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டில் சட்டப்பூர்வமாக வசிக்கும், செல்லுபடியாகும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத, ஆனால் அவசர நிலைமை காரணமாக விருப்பத்துடன் இலங்கை திரும்ப விரும்பும் இலங்கை பிரஜை ஒருவருக்கு இ.டி.டி வழங்கப்படலாம். கடவுச்சீட்டு தொலைந்துபோதல், திருடப்படுதல், சேதமடைதல் அல்லது காலாவதியாதல், கடவுச்சீட்டின் அனைத்துப் பக்கங்களும் முடிவடைதல் அல்லது இதுவரை இலங்கை கடவுச்சீட்டு வழங்கப்படாத புதிதாகப் பிறந்த குழந்தை சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்றவை இத்தகைய சூழ்நிலைகளில் அடங்கும்.
இ.டி.டி ஆவணமானது ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் இலங்கைக்கு செல்லும் ஒற்றைப் பயணத்திற்கு மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படலாம். அதன்படி,விசா புதுப்பித்தல்,தங்கியிருக்கும் காலத்தை நீடித்தல், வெளிநாட்டில் தொடர்ந்து வசித்தல்இ மூன்றாவது நாட்டிற்குப் பயணம் செய்தல் அல்லது சர்வதேச பயணத்துடன் தொடர்புடைய வேறு எந்த நோக்கத்திற்காகவும் இதைப் பயன்படுத்த முடியாது.
இந்தியாவில் சென்னையில் வசிக்கும் இலங்கை பிரஜைகளைப் பொறுத்தவரையில், சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து தங்களின் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் கிடைக்கும் வரை, தற்போதுள்ள செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளைத் தம்வசம் வைத்திருக்க முடியும்.
எந்தவொரு சிரமத்தையும் தவிர்ப்பதற்காக, தங்களின் தற்போதைய கடவுச்சீட்டுகள் காலாவதியாவதற்கு முன்னதாகவே கடவுச்சீட்டு புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவைப்படும் இடங்களில், சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து,கடவுச்சீட்டு புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் செயலாக்குவதை வசதிக்காகவும் விரைவுபடுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.
ஒரு சாதாரண கடவுச்சீட்டை வழங்குவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ தேவையான ஆதரவு ஆவணங்கள் ஒருவரிடம் இல்லாத பட்சத்தில், அவர் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டலையும் உதவியையும் பெறலாம். விண்ணப்பதாரரின் இலங்கை குடியுரிமை சரிபார்க்கப்பட்டதும், விண்ணப்பதாரர் இலங்கை திரும்புவதற்கு வசதியாக நடைமுறையில் உள்ள வழிமுறைகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு தற்காலிக பயண ஆவணம் வழங்கப்படலாம். இலங்கை திரும்பியதும்,விண்ணப்பதாரர் தேவையான ஆதரவு ஆவணங்களைப் பெற்று, நடைமுறையிலுள்ள சட்டங்கள் விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு அமைய வழக்கமான கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னையிலும் தமிழ் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கான கடவுச்சீட்டுகள் மற்றும் அவசர பயண ஆவணங்களை வழங்குதல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான மேலதிக தகவல்கள், விளக்கங்கள் மற்றும் உதவிகளை, இவற்றுக்கு பொறுப்பான தகுதியுள்ள அதிகார சபையான இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்.