யாழ் அரியாலை செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி மாபெரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் வெள்ளிக்கிழமை (19.06.2026) யாழ்.செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல்-02 மணியளவில் யாழ்.செம்மணிச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் பின்னர் பேரணியாகச் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி மயானத்துக்கு முன்பாகச் சென்றடைந்து அங்கும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுரு, தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.ஸ்ரீகாந்தா,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்- சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் குழுவினர் செம்மணி அகழ்வுப் பணிகளை மாலை-05 மணியளவில் நேரில் பார்வையிட வருகை தந்த நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்குச் சர்வதேச பங்கேற்பைக் கோரியும், மனிதப் புதைகுழிகளுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேசப் பொறிமுறையுடனான நீதியை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் சுமார்-45 நிமிடங்கள் வரை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை அறவே கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றனர்.