சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான கொன்சியூலர் நாயகமாக முஸ்லிம் அல்லாத ஒருவரை எப்போதும் நியமிப்பதில்லை எனவும், எதிர்வருங்காலத்தில் அப்பதவிக்கு அத்துறை சார்ந்த முஸ்லிம் ஒருவரை நியமிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாற்றம் குறித்தும், இவ்வருடத்துக்கான இலக்கு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று திங்கட்கிழமை (5) காலை வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர மற்றும் அமைச்சின்கீழ் இயங்கிவரும் முக்கிய கட்டமைப்புக்களுக்கான பொறுப்பதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இச்சந்திப்பில் சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கொன்சியூலர் நாயகமாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான கொன்சியூலர் நாயகமாக நாம் முஸ்லிம் அல்லாத ஒருவரை எப்போதும் நியமிப்பதில்லை. இருப்பினும் ஏற்கனவே சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் வகையில் அத்துறை சார்ந்த ஒருவரை நியமிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அப்பதவிக்கு முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து வெளிப்படுத்தப்படும் கரிசனைகளின்படி ஜித்தாவுக்கான கொன்சியூலர் நாயகமாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிக்கமுடியாது. ஆகவே எதிர்வருங்காலத்தில் அப்பதவிக்கு அத்துறை சார்ந்த முஸ்லிம் ஒருவரை நியமிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறோம் என்றார்.