ஜே.வி.பி.யின் இருப்பு முழுமையாக ஊழல் மற்றும் லஞ்சத்தின் மீதே தங்கியுள்ளது. கடந்த காலங்களில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஜே.வி.பி இளைஞர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான திசைக்காட்டி அரசாங்கத்திற்கு எதிராக அவர்களே முதலில் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள் என சர்வஜன அதிகாரத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தற்போது ஜே.வி.பி தலைவர்களால் ஏப்ரல் வீரர் நினைவு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. 1971 மற்றும் 88-89 காலப்பகுதிகளில் அன்றைய ஆட்சியாளர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும் சாதாரண மக்களின் வறுமைக்கும் எதிராகவே அந்த இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
அன்று ஆட்சியாளர்களை முதலாளித்துவவாதிகள் என விமர்சித்த ஜே.வி.பி இன்று நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரம் என முழுமையான அரச அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆனால் இன்று மக்களுக்குக் கிடைத்துள்ளது என்ன?
அதிகாரத்திற்கு வந்த ஒரு வருட காலத்திற்குள் மின்சாரக் கட்டணம் எரிபொருள் விலை மற்றும் எரிவாயு விலை என்பன பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்து சாதாரண மக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
வறுமையை ஒரு அடையாள அட்டையாகப் பயன்படுத்தி மக்களின் அனுதாபத்தைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளனர்.
அன்று ஆட்சியில் இருந்தவர்களின் சொகுசு வாகனங்கள் மற்றும் வெளிநாட்டுப் படிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கத் தூண்டியவர்கள் இன்று தாமும் அதே சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
உள்ளாடை தைக்கக்கூட வசதியில்லை என்றும் ஓலைக்குடிசையில் வாழ்வதாகவும் நண்பர்களிடம் ஆடை வாங்கி அணிவதாகவும் கூறி நாடகமாடியவர்களின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக அமைச்சர் லால் காந்தவின் புதிய சொகுசு மாளிகை குறித்து பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மாளிகையை கொள்வனவு செய்ய அவருக்கு பணம் எப்படி கிடைத்தது? தான் நினைத்தால் ஒருவரிடம் ஐந்து இலட்சம் வீதம் பலரிடம் பணம் பெற முடியும் என அவர் கூறுகின்றார். இதுவே லஞ்ச ஊழலுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
விவசாய அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு நெல் ஆலை உரிமையாளர்களும் உர இறக்குமதியாளர்களும் பணத்தை வாரி வழங்குவார்கள். இது அப்பட்டமான ஊழலாகும்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க ஊழலுக்கு எதிராகப் பிரசங்கம் செய்வதை நிறுத்திவிட்டு அமைச்சர்களுக்கு லஞ்சம் என்றால் என்ன என்பதைப் புரியவைக்க வேண்டும்.
லால் காந்தவின் வீடு மட்டுமல்ல ஜே.வி.பி.யின் பெலவத்தை தலைமை காரியாலயத்தை நிர்மாணிக்கக் கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கியது யார் என்பதையும் அதன் பின்னர் அவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகள் என்ன என்பதையும் விசாரணை செய்தால் நாட்டின் பாரிய ஊழல்களைக் கண்டறிய முடியும் என்றார்.