இந்தியாவில் டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த எங்களுக்கு எதற்கு டபுள் இன்ஜின் என்று பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி ‘தீ பரவட்டும்’ எனும் தலைப்பில் திருவொற்றியூரில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார்.
இதில் உதயநிதி மேலும் பேசியதாவது: ஹரியானா, பிஹார், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தாய் மொழிகளை இந்தி விழுங்கிவிட்டது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என்று இந்தியை திணிக்கும் முயற்சியாக குலக்கல்வி திட்டத்தையும், சம்ஸ்கிருதத்தையும் நுழைக்க பார்க்கின்றனர்.
எனவே புதிய கல்விக்கொள்கையை ஏற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார். மொழி உரிமை என்று வரும்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது. இதனால் மத்திய பாஜக அரசுக்கு தமிழகத்தையும், முதல்வரையும் பார்த்தால் கோபம் வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த தமிழகத்துக்கு எதற்கு டபுள் இன்ஜின், கரோனா நேரத்தில் தட்டுமுட்டு சாமான்களை தட்டுங்கள், வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறியவர்தான் பிரதமர் மோடி.
கரப்ஷன், மாஃபியா, க்ரைம் நிறைந்திருப்பதாக தமிழகத்தை விமர்சிக்கிறார். கரப்ஷனுக்கு வாரிசான அதிமுகவின் பழனிசாமி, டெல்லி மாஃபியாவிடம் பணத்தை இழந்த அமமுகவின் தினகரன், மருத்துவ கல்லூரிகளுக்கு முறை கேடாக அனுமதி கொடுத்து க்ரைமில் மாட்டிய அன்புமணி என மூவரும் மோடியுடன் தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், கே.பி.சங்கர், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் இரா.மூர்த்தி, வெற்றியழகன், ஜே.ஜே.எபினேசர், திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த தமிழகத்துக்கு எதற்கு டபுள் இன்ஜின்?” - உதயநிதி கேள்வி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space