நாட்டில்  இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 3,422 புதிய டெங்கு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜூலை 3ஆம் திகதி நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 58,810 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டில் டெங்கு நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12,017 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 11,740 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த இரு மாவட்டங்களிலும் பதிவாகியுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாட்டின் ஒட்டுமொத்த டெங்கு பாதிப்பில் 40 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மேல் பருவக்காற்று மழையின் ஆரம்பத்தைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மே மாதத்தில் 8,590 ஆகக் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, ஜூன் மாதத்தில் 21,549 ஆகப் பல மடங்கு உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.