நாட்டில் இயங்கும் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தங்களது விநியோக அளவைக் குறைத்துக் கொண்டதால், நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.கொழும்பில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,நிலவும் நிலைமை குறித்து ஆராய அமைச்சின் செயலாளரால் அனைத்து விநியோக நிறுவனங்களுடனும் நடத்தப்பட்ட அவசரக் கலந்துரையாடலின் போதே இவ்விபரங்கள் வெளிவந்துள்ளன. இக்கலந்துரையாடலின் போது, தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் தமக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படுவதாகத் தனியார் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.அதன்படி  RM Park  நிறுவனம் டீசல் லீற்றருக்கு 173 ரூபாவும், பெற்றோலுக்கு 38.75 ரூபாவும் நஷ்டமடைவதாகக் கூறியுள்ளது. மேலும்  Sinopec  நிறுவனம் டீசலுக்கு 192 ரூபாவும், பெற்றோலுக்கு 67 ரூபாவும் நஷ்டம் அடைவதுடன், மற்றொரு நிறுவனம் டீசலுக்கு 136 ரூபாவும், பெற்றோலுக்கு 57 ரூபாவும் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளன.அரச நிறுவனமான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தேசியப் பொறுப்பு உள்ள போதிலும், வணிக நோக்கில் செயற்படும் தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளும்போது விநியோகத்தைக் குறைக்கின்றன.கடந்த காலத்தில் சினொபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, அரச கட்டுப்பாட்டு விலையால் ஏற்படும் இழப்பை அரசாங்கமே ஈடுசெய்ய வேண்டும் என்ற சட்டப்பூர்வ நிபந்தனை உள்ளது. இதனால் நிறுவனங்கள் தமக்கான விலையைத் தீர்மானிக்க அனுமதிப்பதா அல்லது அரசு மானியம் வழங்கி இழப்பை ஏற்பதா என்பது குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஜனவரி மாதம் முதலே தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் குறைத்ததால், சந்தைப் பொறுப்பு முழுவதும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மீதே விழுந்துள்ளது.குறிப்பாக, கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க, அமைச்சின் செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் 52 முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருளை விநியோகிக்கத் தனியார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், தற்போது அப்பகுதிகளில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது என்றார்.