தப்பியோட முயன்ற சந்தேகநபர் சிறிலங்கா காவல் துறையால் சுட்டுப் பிடிப்பு
Ad Space
Ad Space
பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மீண்டும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறை பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (18) அதிகாலை பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீண்டும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அம்பாறை மாவட்டத்தின் கொட்டவேஹெர பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில், சந்தேகநபர் தப்பியோட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் அவரது தொடைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த சந்தேகநபர் தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அம்பாறை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Ad Space
Ad Space