தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி இன்று வியாழக்கிழமை (29.10.2026) பிற்பகல் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது- 50) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து அந்த அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் சாரதியாகப் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த அமைப்பிலிருந்து விலகி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்- 13 ஆம் திகதி திருச்சிக்குத் தப்பிச் சென்று அங்கு தற்காலிகமாக வசித்து வந்தவாறே சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு வசித்து வந்த வேளையில் 2015 ஜூலை மாதம்- 20 ஆம் திகதி அயலவர்கள் அளித்த தகவலின் பேரில் தமிழ்நாடுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2018 ஏப்ரல் 27 ஆம் திகதி இந்திய நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45,000 இந்திய ரூபாவைத் தண்டப்பணமாகச் செலுத்தவும் உத்தரவிட்டது. குறித்த தீர்ப்புக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து இவரது சிறைத்தண்டனை 07 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் தண்டனைக் காலம் நிறைவடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.10.2026) மாலை திருச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 'யு.எல்.-134' (UL-134) விசேட விமானத்தின் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.